Saturday, June 20, 2020

துர்கா மாதா - விமர்சனம்

துர்கா மாதா - விமர்சனம்

 

2016-இல் “என்னில் உணர்ந்தவை” என்ற வலைப்பூ எனக்கு அறிமுகமானது. என்னில் உணர்ந்தவை, எனக்குள் உணர்த்தியவை அனேகம். 

ஜீவா என்ற மிகச் சிறந்த எழுத்தாளர் காயத்ரி என்ற புனைபெயரில் எழுதும் அற்புதமான வலைப்பூ. இன்னும் சொல்லப் போனால், இதை வலைப்பூ என்பதைவிட வலைப்புயல் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். 

ஏனெனில், தன் சீர்மிகு எழுத்துக்களாலும் கருத்துகளாலும் நம் மனதில் ஆற்றல் மிக்க எண்ண அலைகளைக் கிளப்புபவர். தன் பெண்ணிய சிந்தனைகளை  அழுத்தமாகவும், அதே சமயம் எதார்த்தத்தை மீறாமலும் பதிவு செய்பவர். 

ச்சீ என்று இந்த உலகம் பேசத் தயங்கும் / ஒதுக்கும் விஷயங்களைக்கூட, தைரியமாக அணுகி, தன் அழகான எழுத்தின் மூலம் முறையான புரிதலையும் விழிப்புணர்வையும் எற்படுத்துபவர். 

இவர் “தற்கொலைக் கடிதம்” என்கிற சிறுகதைத் தொகுப்பும், “தப்பித்தலென்பது வாய்க்கப் போவதில்லை” என்கிற கவிதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மிக ஆழமானவை. 

இதுவரை, இவர் “துர்காமாதா” மற்றும் “ஈஸ்வரன்கள்” என்ற இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார். இவரது முதல் நாவலான துர்காமாதாவிற்கு விமர்சனம் எழுதும் சிறந்த வாய்ப்பு சென்ற ஆண்டு எனக்குக் கிட்டியது. இதோ அந்த விமர்சனம்:

 

துர்கா மாதா - விமர்சனம்

 

நூல் ஆரம்பத்திலிருந்தே [ஒரு சில வார்த்தைகள்] சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. கூடவே இழையோடும் வலிகளும் துயரங்களும் விரைவில் இதற்கெல்லாம் ஒரு தீர்வு வராதா! என்ற ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறது. 

கதையின் ஆரம்பத்தில் வரும் சிறுமி மலர் குறித்த காட்சிகளிலேயே, மலரையொத்த பெண்களும் சிறுமிகளும் கறுக்கி / கசக்கி போடப்படும் அவலத்தை நம் கண் முன்னே நிறுத்தி, இக்கதை கையாளப் போகும் கருவை மெதுவாய் நமக்குள் விளக்கும் / விதைக்கும் வித்தை சிறப்பு. 

முதலில் ஒரு கோணத்தில் தொடங்கி பயணித்து, பின்னர் அதை முக்கிய இடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு கோணத்திலிருந்து கதையை விளக்கி முடிச்சுக்களை அவிழ்த்திருக்கும் விதம் சுவையாக இருந்தது. இக்கதையின் நாயகியான துர்கா, பெண்களின் திடமான ஆளுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். 

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தொட்டதற்கெல்லாம் கோபப்படும், அழுதுவிடும், இன்னும் இத்யாதி இத்யாதி இயல்புகளையெல்லாம் கொண்டிருக்கும் பெண்களிலிருந்து இவள் நிரம்பவே மாறுபட்டவள். 

தனக்கு ஆசுவாசம் தேவைப்பட்டதால் பாபுவைப் பற்றிச் சொல்லுவது, கழிவறைக்குச் சென்று வந்த பிறகு தன் வலியை, உதட்டை அழுத்தி அடக்கிக் கொள்வது போன்ற இடங்களில் துர்காவின் தன்னம்பிக்கையும் மன தைரியமும் பயங்கரமாய் வெளிப்படுகிறது. 

சீருடையைக் களைவதே தான் நிர்வாணமாக இருப்பதாக நினைக்குமளவிற்கு உணர்வுபூர்வமாய், தான் நேசித்த இயக்கத்தையே போதிய விளைவுகளை ஏற்படுத்தாத காரணத்தால் அதிலுள்ள குறைகளையும் பகிரங்கமாய்ச் சுட்டிக் காட்டிவிட்டு வெளியேறுவதும், தன் மேலாளரை நயமாய் கேன்டீனுக்கு அழைத்து தண்டிக்கும் இடத்திலும் துர்கா எந்த அளவிற்குத் தான் தீர்க்கமானவள் என்றும், உடனடி விளைவுகளை விரும்புபவள் என்றும் புலப்படுத்துகிறாள். துர்கா மட்டுமின்றி, சுடரும், நிஷாவும் துணிச்சலான பெண்களுக்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்குகிறார்கள். 

கதையின் முதல் சில வரிகளிலேயே, அந்தக் கால ஆணாதிக்கம் பெண்களை வீட்டிலேயே அடைத்து வைத்தது ஆனால், இந்தக் கால ஆணாதிக்கம் பெண்களை வேலைக்கு அனுப்பி சோம்பேறிகளாகவும் சுகபோகமாகவும் வாழ்ந்து கொன்டிருக்கிறது என்ற வித்தியாசத்தைச் சிறப்பாய் உணர்த்தியிருக்கிறார். 

கதாபாத்திர அமைப்பும் அவர்களின் குணாதிசயங்களும் நம் அன்றாட வாழ்க்கையின் ஏதாவதொரு தருணத்தில் சந்தித்த / சந்திப்பவர்கள் போன்றேயிருப்பதால் கதை மனதிற்கு இன்னும் நெருக்கமாகிவிடுகிறது. இடையிடையே வரும் ஹிந்தி சொற்களும், வட இந்திய தமிழ் உச்சரிப்புகளும் அந்த மாந்தர்களூடே நம்மையும் உணர்வுபூர்வமாக உலவ விடுகிறது. 

வட இந்தியர்கள், பெட்ஷீட் மற்றும் பாத்திரங்கள் விற்க வந்தால்கூட ஒருவித பயத்துடனேயே அவர்களைப் பார்க்க வைத்த சில திரைப்பட காட்சிகளிலிருந்தும், பல செய்தித்தாள் செய்திகளிலிருந்தும் மாறுபட்டு, அவர்களுக்குப் பின்னால் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல். 

முதலாளித்துவ நெருக்கடி மற்றும் ஆளும் வர்க்கங்களின் அதிகார வெறியாட்டம் போன்ற விஷயங்களைப் பட்டவர்த்தனமாய் பேசி, எத்தகைய கிடுக்குப்பிடிகளில் சிக்கிக் கொன்டு நம் சமூகம் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்நாவல். ஒரு முக்கியமான இடத்தில் [“இவ்ளோ சீரியசானப் பிரச்சினையை உங்க தமிழ்ச்சமூகம் எப்படி பார்க்குது தோழர்?” “தமிழன் உயர்ந்த பண்பாடும் நாகரீகமும் கொண்ட மூத்தக்குடி என்னும் பெருமிதத்தோடுதான்...” டாக்டர் கூச்சத்தோடு சிரித்தார்.] இரண்டே வரிகளில் கலாச்சாரம் பண்பாடு என்ற பொய்ப் பிரச்சாரத்தின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது இந்தக் கதை. 

அருப்புக் கோட்டை விவகாரம், பொள்ளாச்சி விவகாரம் போன்றவற்றை இக்கதை தொட்டுச் செல்வதாலும் அவற்றிற்கானத் தீர்வுகளைப் பேசுவதாலும் நாவலை வாசிக்கிறோம் என்பதைத் தாண்டி, எதார்த்த உலகில் நாம் சில முக்கிய நண்பர்களோடு இவற்றை விவாதித்துக் கொன்டிருக்கிறோம் என்று உணரவைப்பதில் இந்நாவல் வெற்றி பெற்றிருக்கிறது. 

குட் டச் [Good touch] பேட் டச் [bad touch] போன்ற விஷயங்களை விரிவாகவும் விவேகத்துடனும் பேசுவதால் அனைத்துத் தரப்பினரும் நிச்சயம் படிக்கவேண்டிய நாவல் என்ற தரத்திற்கு உயர்ந்து, இவற்றைக் குறித்த வழக்கமான கற்பிதங்களையும் கருத்து பிம்பங்களையும் உடைத்து, வேறொரு புதிய கோணத்திலும், வித்தியாசமான, சரியான மற்றும் நியாயமான அணுகு முறையைக் கற்பித்து பெரியவர்கள் பெரியவர்களாக இருந்தால் குழந்தைகளும் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்ற கருத்தை அழகாய் புரியவைப்பதில் இந்நாவல் தனித்து நிற்கிறது. 

உரிமைகள், கடமைகள், வாழ்வியல் போன்ற இத்தியாதிகளில் ஆண்களிடமிருந்து தனித்து நிற்பதோ அல்லது ஆண்களை மிஞ்சி நிற்பதோ அல்ல பெண்ணியம், மாறாக அவர்களுக்குச் சமமாய் / நிகராய் நிற்பதே நிஜமான பெண்ணியம் என்ற கருத்தைத் தரமாய்ப் புரியவைப்பதில் இந்நாவல் உயர்ந்து நிற்கிறது. 

நாவலின் இறுதியில் துர்கா புல்லட்டில் கம்பீரமாக வரும் காட்சி வேட்டைக்கு புறப்பட்ட சாமி குதிரையேறி செல்வதை கண்முன்னே கொண்டுவருகிறது. 

கதை அதிகாலை நேரத்தில் ஒரு துயரக் காட்சியோடு தொடங்கி, ஒரு இரவு வேளையில் மகிழ்ச்சியோடும் துர்காவின் புன்னகையோடும் முடிவடைவதாகச் சித்தரித்திருக்கும் விதம் இந்நாவல் இருட்டில் மறைந்திருக்கிற / மறைக்கப்பட்டிருக்கிற துயரங்களையும் வேதனைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, அவற்றிற்கானத் தீர்வையும், இவற்றிற்குக் காரணமானவர்களுக்கே இருளை திருப்பித் தரவேண்டும் என்ற கருத்தை அழகாய் விளக்குகிறது.

இறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால், துஷ்டர்களை துடைத்தெறிய துரிதமாய்ப் புறப்பட்டால், துன்பங்களைத் துடைக்காமல் துளியும் ஓயமாட்டாள் இந்த துர்கா மாதா. 

***

இப்போது இந்தப் புதினம் நண்பர் நவீன் ஹரி அவர்களின் அழகான ஆங்கில மொழியாக்கத்தில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.

It is his special Debut Translated Novel!

இத்தகையச் சிறந்த புதினத்தை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நண்பர் நவீனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் மற்றும் நன்றிகளும்.

அமேசான் கிண்டிலில் தமிழில்

துர்கா மாதா

ஆங்கில மொழிபெயர்ப்பில்

  DURGA MAATHA:The protector of social justice



26 comments:

  1. புத்தகத்தை படித்தவன் என்ற என் பார்வையில் விமர்சனம் மிக அருமை. அணைத்தையும் எடுத்துக் காட்டியிருக்கிறாய். வாழ்த்துக்கள். நவீனுக்கும் வாழ்த்துக்கள். ஆங்கில பதிப்பையும் விரைவில் வாசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் சகொ. நிச்சயமாக நவீன் அவர்களுடய முயற்சி பாராட்டுக்குறியது.

      Delete
  2. நல்லதொரு அறிமுகம். சிறப்பாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் ஃபெர்ணாண்டோ. பாராட்டுகளும் வாழ்த்துகளும். அமேசான் கிண்டில் வழி தரவிறக்கம் செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Venkat sir, வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள். உங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஊக்கம் அளிக்கிரது.

      Delete
  3. ஆழ்ந்த அருமையான விமர்சனம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சார்.

      Delete
  4. மிக அருமையான விமர்சனம். உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல. தொடர்ந்து படியுங்கள்.

      Delete
  5. மிகவும் அருமையான விமர்சனம். உங்களின் இந்த விரிவான விமர்சனம் துர்கா மாதா கதையின் கருவூலம் முழுமையாக புரிந்துகொள்ளும் வகையில் உயிருள்ள விமர்சனமாக அமைந்துள்ளது.by.PR

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ஆழ்ந்து படித்து கருத்துக்களை பதிவிட்டமைக்கும் மிகுந்த நன்றிகள் மாமா

      Delete
  6. ஒவ்வொரு வார்த்தையும் புதினத்தைப் படிக்கத் தூண்டுகிறது. அருமையான விமர்சனம். லிங்க் கொடுத்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றிகள். இரசித்துப் படித்து நீங்கள் பதிவிட்ட கருத்துக்களும் வாழ்த்துதலும் உட்சாகமும், ஊக்கமும் அளிக்கிறது. தொடர்ந்து படிப்போம் பயணிப்போம்.

      Delete
  7. Thanks for your detailed review bro

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு நன்றி நன்பரே. சிறப்பான மொழிபெயர்ப்பிற்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

      Delete
  8. நல்ல விமர்சனம். வாழ்த்துகள்!. புத்தகத்தை ஆங்கிலத்தில் நவீன் அவர்கள் மொழிபெயர்த்ததும் லிங்க் கண்டேன். வாழ்த்துகள்.

    துளசிதரன்

    ஃபெர்னாண்டோ விமர்சனம் நல்லா எழுதியிருக்கீங்க. நவீன் மொழி பெயர்த்ததும் சிறப்பு. இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Dear Sir, and Madam,
      வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

      Delete
  9. வாழ்க வளமுடன் இது போன்ற கருத்துக்களும் இதுபோன்ற பதவிகளும் நீங்கள் பதிவு செய்து கொண்டே இருங்கள் எங்கள் வாழ்க்கைக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கின்றது

    ReplyDelete
  10. அருமையான நூல் விமர்சனம் அண்ணா
    மேலும் தொடருங்கள்

    ReplyDelete
  11. உங்கள் விமர்சனம் அருமையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள்! தொடர்ந்து பயணிப்போம்.

      Delete
  12. நாவலின் சுருக்கத்தை நயமுடனே விமர்சனம் செய்யும் விதம் நாவல் முழுவதையும் படிக்கவேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது.ஃபெர்னாண்டோ, நவீன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிகுந்த நன்றிகள் சார்.

      Delete
  13. ஆழமான விமர்சனம் படிக்கத் தூண்டும் ஆவலை ஏற்படுத்துகிறது.
    எழுத்தை சற்று பெரிதாக எழுதலாமே... - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிகுந்த நன்றிகள் சார். நிச்சயமாக வரும் பதிவுகளில் சரிசெய்துவிடுகிறேன்.

      Delete